புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரண்டு நாள்கள் மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தொடங்கியது.
தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்ற நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்து அண்மையில் தகவல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தமிழகம், புதுவை உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தேர்தலை நடத்துவதில் புதுவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறந்த முன்மாதிரியாக விளங்குவதாகப் பாராட்டினார்.
“எதிர்வரும் தேர்தல் குறித்தும் அசாம், புதுவை யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் தொடர்பாகவும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலர் சரத் செளகான் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 26, 27ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.
“புதுவையைப் பொறுத்தவரை இதுவரைக்கும் நடைபெற்ற தேர்தல்களில் 82% வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் தேர்தலில் இதைவிட அதிகமான வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். புதுவையில் இதுவரை அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. புதுவைத் தேர்தல் நாட்டுக்கே முன்மாதிரியானது,” என்றார் ஞானேஷ்குமார்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைய ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களிலும் ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெற்று மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

