சென்னை: தமிழகத் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை இந்தியத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
புதிய தலைமைச் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநராகச் சந்தீப் மிட்டல் பொறுப்பேற்றிருக்கிறார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு சென்ற மாதம் (மார்ச்) 15ஆம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் மூவாண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உயர் பொறுப்புகளில் இருப்போர், இதர அதிகாரிகளை மாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, தமிழகத் தலைமைச் செயலரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநரையும் மாற்றத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
வழக்கமாகப் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றம் நடைபெறும். அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட தலைமை காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது, காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்காதது குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த ஏப்ரம் 2ஆம் தேதி தமிழகக் காவல் துறையின் சட்ட, ஒழுங்கு பிரிவுத் தலைமை இயக்குநர் ஜி. வெங்கட ராமன் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

