தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: காகிதப் பயன்பாடு 80% குறைந்தது

மின்னிலக்க உருமாற்றம் காணும் தேர்தல் நடைமுறைகள்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: காகிதப் பயன்பாடு 80% குறைந்தது

2 mins read
0b18311b-d3c1-4a5e-9edf-835a40a9d7de
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் ‘ஏ4’ அளவுத் தாள் பயன்பாடு தொடர்ந்து குறைந்துவருவதை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன. - மாதிரிப்படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

சென்னை: மின்னிலக்கத் தொழில்நுட்பத்தால் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் செயல்பாடுகள் பெரிதும் உருமாற்றம் கண்டுவருகின்றன.

கைப்பேசித் தொழில்நுட்பத்தைத் தழுவியுள்ளதால் காகிதப் பயன்பாடு கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைந்திருக்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த, நிலைத்தன்மைமிக்க தேர்தல் முறையாக மாறத் தொடங்கியுள்ளது.

கைப்பேசிச் செயலி அடிப்படையிலான தேர்தல் நிர்வாக முறைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செயல்பாடுகளைச் சீராக்கி, செயல்திறனை மேம்படுத்தி, காகிதம் சார்ந்த ஆவணப்படுத்தலைச் சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘ஏ4’ தாள் பயன்பாடு குறைந்தது

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் ‘ஏ4’ அளவுத் தாள் பயன்பாடு தொடர்ந்து குறைந்துவருவதை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஏறத்தாழ 41 லட்சம் ‘ஏ4’ தாள்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த எண்ணிக்கை 2021 தேர்தலில் 8.73 லட்சமாகக் குறைந்தது.

மின்னிலக்கத் தேர்தல் கருவிகளையும் நிகழ்நேரத் தரவுப் பதிவு முறைகளுமே இதற்குக் காரணம்.

இவ்வாண்டுத் தேர்தலில் அந்த எண்ணிக்கை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக ‘ஐஏஎன்எஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

செயலிகளால் சீராகும் நடைமுறைகள்

இப்போது, வாக்காளர் எண்ணிக்கை, வாக்குப்பதிவு விகிதம், தேர்தல் முடிவுகள் போன்றவற்றைத் தேர்தல் அதிகாரிகள் பெரும்பாலும் மின்னிலக்க முறையிலேயே பதிவுசெய்கின்றனர். இதனால், தாளில் எழுத வேண்டிய வேலை பெரிதும் குறைந்துவிட்டது.

“வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதையும் தாமதத்தையும் மின்னிலக்கக் கருவிகள் குறைத்திருக்கின்றன. முன்னர்ப் பல அடுக்குநிலைகளில் செய்ய வேண்டியிருந்த வேலைகளை இப்போது கைப்பேசித் தளங்கள் மூலம் உடனுக்குடன் செய்ய முடிகிறது,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

வழக்கமாக, ஆவணப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 60-70 ‘ஏ4’ தாள்கள் தேவைப்படும். இப்போது, செயலி சார்ந்த தரவு நிர்வாகத்தால் அது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிட்டது.

பசுமைத் தேர்தலை நோக்கிய பயணம்

இந்த நடவடிக்கை இந்தியாவில் பசுமைத் தேர்தல்களை நடத்துவதற்கான முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது. இது விரிவான நிலைத்தன்மை இலக்குகளுடன் ஒத்துப்போவதுடன், பேரளவிலான ஜனநாயகச் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆயினும், தேர்தலின்போது பயன்படுத்தப்படும் நெகிழி, மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் போன்ற கழிவுகளைக் குறைப்பதில் இன்னும் சவால்கள் நீடிப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அதனால், விரிவான, நிலைத்தன்மைமிக்க தேர்தல் கட்டமைப்புக்கு எளிதில் மட்கும் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்னிலக்கப் புத்தாக்கம்

இந்தியப் பொதுத் தேர்தல் உலகின் ஆகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்திறன், துல்லியம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தலாம் என்பதற்குத் தமிழகத்தின் மின்னிலக்கத் தேர்தல் முயற்சிகள் பெருஞ்சான்றாகத் திகழ்கின்றன.

மின்னிலக்க வாக்குப்பதிவுத் தீர்வுகளையும் காகிதமில்லாத் தேர்தல் நடைமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம், இந்தியா தூய்மையான, விரைவான, வெளிப்படையான தேர்தல்களை நோக்கிச் சீராக முன்னேறி வருவதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்