வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 400,000 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 400,000 பேர் விண்ணப்பம்

2 mins read
67fa0023-ba2d-4ba0-8b06-41be72fd2a37
தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க விரும்பி, 400,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும் நீக்கவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்ற வார இறுதியில் நடந்த அந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.

அம்முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்று, விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து அளித்தனர். இணையம் வழியாக விண்ணப்பம் செய்வது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இரண்டு நாள் முகாம் நிறைவில், ஏறக்குறைய 400,000 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக சாகு தெரிவித்தார். திருத்தம் செய்யவும் முகவரி மாற்றவும் கிட்டத்தட்ட 200,000 பேர் விண்ணப்பம் செய்தனர்.

திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களே அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இதற்கிடையே, தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பது, அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து தேர்தல் அலுவலகர்களுக்கு பல்வேறு கட்டங்களாக உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேர்தல் நடைமுறை குறித்தும் அவர்களுக்கு போதுமான விவரங்கள் அளிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உரிய அறிக்கைகள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுதேர்தல்வாக்காளர்