தமிழகத்தில் பசுவதைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் பசுவதைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்

1 mins read
ee2fe1f8-26b5-479f-b24d-4cb8d1a52e9f
தமிழகம் முழுவதும் எந்தவொரு நாளிலும் பசுக்கள், கன்றுகளை வெட்ட தடை விதித்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளைக் கொல்ல வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. - கோப்புப்படம்: டிடீநெக்ஸ்ட்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் பசுக்கள், கன்றுகளை அறுக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

பொது இடங்களில் பசுக்கள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் எந்தவொரு நாளிலும் பசுக்கள், கன்றுகளை அறுக்கத் தடை விதித்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளை அறுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தமிழக அரசு தமது வாதத்தில், “உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் முரண்பாடாக உள்ளன. மேலும், இது தமிழக விலங்குகள் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அச்சட்டத்தின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட, வேலைக்கோ அல்லது இனப்பெருக்கத்துக்கோ தகுதியற்ற பசுக்களை உரிய அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற பிறகு இறைச்சிக்காக அறுக்க அனுமதிக்கப்படுகிறது,” என்று சுட்டிக்காட்டியது.

அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பசுவதை தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்