போலி பேராசிரியர்கள் நியமனம்: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைப்பு

போலி பேராசிரியர்கள் நியமனம்: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைப்பு

2 mins read
f6843665-9af7-4659-a864-36f3f5fcc5ea
பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்புச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.

இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றமான ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக் கழக குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 52 ஆயிரத்து 500 பேராசிரியர்களில் 1,900 காலி இடங்கள் இருந்த நிலையில், அதை சரிகட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் தில்லு முல்லு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பிய குற்றச்சாட்டை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் இந்த ஆண்டு இணைப்புச் சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல பொறியியல் கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையைச் சமர்ப்பித்து முறைகேடாகப் பணி புரிந்தது போல் கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரம் தற்போது விசுவரூபம் எடுத்து இருக்கிறது. தில்லு முல்லு செய்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் குழு நடத்திய ஆய்வுகளில், போலி விவரங்களைக் கண்டறியாமல் விட்டது எப்படி என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். உயர் கல்வித்துறையும் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதுகுறித்து துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளிக்கையில், “தில்லுமுல்லு செய்து வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மீதும் அதற்கு துணைபோகும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து இப்போது 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் முன்னாள் பேராசிரியர் குமாரவேல், ஏ.ஐ.சி.டி.இ. பிரதிநிதி சார்பில் உஷா நடேசன், அரசுத் தரப்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் ஆப்ரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாகத் தயாரித்து பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநருக்கு சமர்ப்பித்து உள்ளது. அதே போல் உயர்கல்வித் துறை ஏ.ஐ.சி.டி.இ. ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்