அப்துல் கலாமின் 9வது நினைவு தினம்: ராமேசுவரத்தில் சிறப்புப் பிரார்த்தனை

அப்துல் கலாமின் 9வது நினைவு தினம்: ராமேசுவரத்தில் சிறப்புப் பிரார்த்தனை

2 mins read
69b14a59-3087-4a8e-9989-048b6efbe49f
அப்துல் கலாமின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் 11வது அதிபரான அப்துல் கலாம் தனது அதிபர் பதவி காலத்துக்குப் பின்னர், நாடு முழுவதும் பயணம் செய்து பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து வந்தார். அப்படி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கலாம் உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்துல் கலாமின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

இதில் பாஜகவின் தேசிய சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஜமால் சித்திக், செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், வட்டாட்சியர் அப்துல் ஜபார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தர்மர் எம்.பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

குறிப்புச் சொற்கள்