ஒடிசாவில் கொள்ளையடித்து சிக்கிய திருச்சி ஆடவர்கள்

ஒடிசாவில் கொள்ளையடித்து சிக்கிய திருச்சி ஆடவர்கள்

1 mins read
9804b7ce-fcdb-48d1-9b52-328d85be590b
திருச்சியில் கைது செய்யப்பட்ட 4 ஆடவர்களிடம் இருந்து மடிக்கணினிகளும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களில் திருச்சியைச் சேர்ந்த நால்வர் சிக்கினர்.

ஒடிசா மாநிலம் சாகீத்பூர் பகுதியில் ஒருவரின் கைப்பேசி அண்மையில் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் சாகீத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, திருடப்பட்ட கைப்பேசியை விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் சாகீத்பூர் பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூர்த்தி (42), நந்தகுமார் (47), தினேஷ் (47), மோகித் (48) ஆகிய 4 பேரும் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பிரபல கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஒடிசாவில் 10க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த கொள்ளைக் கும்பலிடமிருந்து 4 மடிக்கணினிகள், 25 கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்