கள்ளக்குறிச்சி சம்பவம்: பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சிபிசிஐடி விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம்: பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சிபிசிஐடி விசாரணை

1 mins read
46c2e1ff-78a0-44a4-adbe-363a5f21e6dd
எஸ்.ஜி.சூர்யா. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

விழுப்புரம்: “உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி காவல்துறை, திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துகளைத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றது,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் முன்னிலையான பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்தையும், அது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறை குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு   முன்னிலையாகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது.

அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான காவல்துறையினர் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சிபிசிஐடி அலுவலகம் அருகில் குவிந்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜி சூர்யா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்