புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய புதிய குழு

புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய புதிய குழு

2 mins read
a0a6adab-6e7a-4687-83d0-3da2f275ef75
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா, 2023’ பாரதிய நாகரிக் கரக்‌ஷா சன்ஹிதா, 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா சட்டம், 2023 என்று மாற்றப்பட்டு ஜூலை 7ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துகளைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதல் அமைச்சர், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசாங்கங்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திங்கட்கிழமை (ஜூலை 8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து. அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்திட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
குற்றவியல் சட்டம்தமிழ் நாடுமத்திய அரசு