கள்ளச் சாராய வழக்கு: 58 பேர் உயிரிழப்பு; ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்றக் காவல்

1 mins read
1753ce69-9c18-48cd-91bc-42bde74b16e5
கோப்புப்படம் - ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கர்ணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கின் தொடர்பில் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஏழு பேரை 15 நாள்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெத்தனால் விநியோகம் செய்த சிவகுமார், ஆலை உரிமையாளர் பென்சிலால், கவுதம் உட்பட ஏழு பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தவிட்டார்.

தற்போது இவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், மெத்தனால் என்ற ரசாயனத்தை விநியோகித்த சிவகுமார், இரு ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம், மெத்தனால் விற்பனையில் ஈடுபட்ட சடையன், ரவி செந்தில், ஏழுமலை உள்ளிட்ட ஏழு பேரையும் கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவலர்கள் முன்னிலைப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இந்தக் கள்ளச் சாராய வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே 14 பேரை கைது செய்திருந்த சிபிசிஐடி காவலர்கள், அவர்களைக் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்