சென்னை: தமிழகத்தில் பத்தாயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ஊரகப் பகுதிச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டு களில் இந்தத் திட்டம் முழுமை அடையும் என்றும் இதற்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சட்டப் பேரவையில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நகரம், கிராமம் என்று வேறுபாடு பார்க்காமல் அனைத்து வளர்ச்சிகளையும் அரசு வழங்கி வருகிறது என்றார்.
சாலை வளர்ச்சி என்பது மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், சாலை மேம்பாட்டுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.
“கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சிய ஒன்றிய சாலைகள் கிராமப்புற மக்களின் பொருளியல் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணியாகவும் உள்ளன.
“தமிழகத்தில் ஏறக்குறைய 1.38 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி சாலைகள் உள்ளன. ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் ஊரக மக்களின் நலனுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
“சாலைகளின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப்பகுதிகளின் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.
“கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி அறிவாற்றலைப் பரவலாக்கி சமூக, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியை துரிதப்படுத்த உதவுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“எனவேதான் பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளை கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஊராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதுவரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோல் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சாலைத்திட்டங்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மொத்தம் 16,500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்றார்.

