நீலகிரி: வீட்டு வேலை செய்வதற்காக கடத்தப்பட்ட தமிழகச் சிறுமிகளை நீலகிரி காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதையடுத்து, இக்கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் கைதாகினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமிகள் கடத்தப்பட்ட காரை காவல்துறையினர் விரைவாக கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
எனினும் விசாரணையின் முடிவில், சிறுமியரை கட்டாயத்தின் பேரில் அழைத்துச் செல்வது உறுதியானது. மேலும் சிறுமியரும் தங்களுக்கு கேரளா செல்ல விருப்பம் இல்லை எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறை அவர்களைக் கடத்திய மூவரைக் கைது செய்தது. ஏற்கெனவே கேரளாவுக்கு கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்போது அங்கு பணிபுரிந்து வருகிறார். அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.


