செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது பாலூறு பகுதியில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட சிலை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலூறு பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களுடன் தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பைச் சேர்ந்த வெற்றித் தமிழனும் இணைந்து கொண்டார். அப்போது பாலூறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சிலை காணப்பட்டது.
அதைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்தபோது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை எனத் தெரியவந்தது. மொத்தம் 3.5 அடி உயரம் கொண்ட அந்தச் சிலையின் பின்தலை பகுதியில் இடதுபக்கமாக வளைந்த கொண்டை காணப்படுகிறது.
“மேலும், கழுத்தில் சில ஆபரணங்கள், அக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை அணிந்தபடி நிற்கும் கோலத்தில் அந்தச் சிலை காணப்படுகிறது.
“இது விஜயநகரப் பேரரசு கால சிலையாக இருக்கக்கூடும். இச்சிலையை வருவாய்த் துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்,” என கல்வெட்டு ஆய்வாளரான வெற்றி தமிழன் வலியுறுத்தி உள்ளார்.

