சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி கடந்த திங்கள்கிழமை 40.5 டிகிரி செல்சியஸ், செவ்வாய்க்கிழமை 41.1 டிகிரி செல்சியஸ், புதன்கிழமை 40.5 டிகிரி செல்சியஸ் அளவு வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாகப் பதிவான நிலையில், கடலோரப் பகுதியான சென்னையில் வெப்ப நிலை குறைவாகவே இருந்தது.
ரீமல் புயல் உருவானதால் தமிழகத்துக்கு இயல்பாக காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆந்திராவில் இருந்து வெப்பமான தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுவதாக சென்னை வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் வெப்பம் மாநில அளவில் உச்ச அளவாக பதிவாகி வருகிறது.
சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். கடந்த மூன்று நாட்களைக் காட்டிலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது..
சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி 45 டிகிரி செல்சியஸ், 2014ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி 42.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருப்பதே உச்சபட்ச அளவாக உள்ளது.” என்று அவர் கூறினார்.

