மும்பை காவலர்கள் சீருடையில் சென்னையில் பணம் பறிக்கும் கும்பல்

2 mins read
d5065c4f-d67c-4dc1-b340-7ff978a929ba
‘மும்பை இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறை’ பெயரில் சென்னையில் புதிய மோசடிக் கும்பல். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புதிய வகை மோசடிக் கும்பல் ஒன்று கைவரிசையைக் காட்டி வருகிறது.

“மும்பை இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறை” பெயரில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, உங்கள் பெயரில் இருந்து பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பார்சலில் கஞ்சா, போதைப்பொருள்கள், போலிக் கடப்பிதழ்கள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உங்கள் மீது மும்பை இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உள்ளது. எனவே, தொடர்பைத் துண்டிக்காமல் வீடியோ அழைப்பில் வரும்படி கூறுவர். வீடியோ அழைப்புக்கு மாற்றியதும், அந்தக் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு மும்பை காவல்துறை சீருடையில் ஒருவர் மிரட்டும் தொனியில் பேசி அவர்களின் அடையாள அட்டை விவரங்களைக் கேட்பார்.

அதன் பின் இந்த ஆதார் அட்டை எண் மூலம் திறக்கப்பட்டுள்ள பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் கள்ளப் பணம் பரிமாறப்பட்டுள்ளது. அது தொடர்பாக நீங்கள் எந்தநேரமும் கைதுசெய்யப்படலாம்.

நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் எனில், நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு நாங்கள் சொல்லும் தொகையை அனுப்புங்கள் என்று அச்சுறுத்திப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கும்பல் வெளிநாடுகளில் இருந்து இயங்குவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, தனித்து வாழும் முதியவர்கள், பெரும் செல்வந்தர்கள், பெண்கள் ஆகியவர்களை இந்த மோசடிக்காரர்கள் குறி வைக்கின்றனர் என்று சென்னை இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்