கேரளாவில் சிலந்தி ஆறு தடுப்பணை கட்டும் பணி தீவிரம்

கேரளாவில் சிலந்தி ஆறு தடுப்பணை கட்டும் பணி தீவிரம்

2 mins read
4b394345-0509-4b62-9921-b6b16d4fd1fa
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சிலந்தி ஆற்றுக்கு இடையே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. - படம்: இந்துதமிழ்
Google News Preferred Icon

உடுமலை: கேரள மாநில அரசு, அங்கிருந்து தமிழகத்திற்கு பாயும் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தின் அமராவதி அணைக்கு பாம்பாறு, சின்னாறு, தேனாறு, சிலந்தி ஆறு ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. சிலந்தி ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வட்டவடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டிவருகிறது. அதற்காக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

வட்டவடா பகுதியில் அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் மக்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. அவ்வகையில், வட்டவடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு, தேசிய வனவிலங்கு வாரியம் ஆகியவற்றிடம் கேரள அரசு அனுமதி பெற்றுள்ளதா என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

மே 24ஆம் தேதி தமிழ் நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநில அரசுகளும் தங்கள் வாதத்தை முன்வைக்க உத்தரவிட்டுள்ளது.

`இடுக்கி பேக்கேஜ்’ திட்டம் மூலம் 8 இடங்களில் தடுப்பணை கட்ட, கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வட்டவாடா பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பசுமைத் தீர்ப்பாயம் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில், அணைக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை தமிழ் நாடு அரசு உறுதி செய்து, நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்