சென்னை: தமிழகத்தில் பதிவாகும் சிறுமிகள் தொடர்பான கடத்தல் வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை மனநிறைவு அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனது 16 வயது மகளை திருமணமான 32 வயது ஆடவர் கடத்திச் சென்றது தொடர்பாக சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றக் கிளையில் ஆள்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணையின்போதே காவல்துறை குறித்து விமர்சனக் கருத்தை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மக்களின் பாதுகாப்புக்காகத்தான் காவல்துறை உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் காவல்துறையின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர்.
“தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவும்தான் காவல்துறை முக்கியத்துவம் அளிப்பதுபோல் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. சிறுமிகள் மாயமான அல்லது கடத்தப்பட்ட புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
“இல்லையெனில் விசாரணை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுறுத்தியது.

