மதுரையில் முதல் மாநாடு: தயாராகும் நடிகர் விஜய்

மதுரையில் முதல் மாநாடு: தயாராகும் நடிகர் விஜய்

2 mins read
7842c3dd-a6e7-4295-83e7-5801bb459832
விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மாநாட்டின்போது தனது கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன் பின்னர் தனது கட்சி நிர்வாகிகள் பட்டியலை முழுமையாக வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, கட்சிப் பணிகளை முழு வேகத்தில் அவர் முடுக்கிவிடுவார் எனத் தொண்டர்கள் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய் நேரடி அரசியலில் ஈடுபட்டதும் சூட்டோடு சூடாக கட்சிப் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில்தான் நடத்துவார் என அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், விஜய் தனது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி, தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

கட்சி தொடங்கியதும் முதல் கட்டமாக இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

தொடக்கத்தில் நிர்வாகிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டனர். எனினும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் கட்சியினர் மத்தியில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட அறிவிப்புகளுக்காக நிர்வாகிகளும் தொண்டர்களும் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயபூர்வான வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்,” என்று சமூக ஊடகப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விஜய்அரசியல்