செல்லப் பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

2 mins read
da2c60da-788d-4449-b0d6-e8f98898fb7f
சிறுமியைக் கடித்த நாயின் உரிமையாளர் புகழேந்தியும் அவருடைய மனைவி, மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அதற்குக் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயதுச் சிறுமியை, இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின. மகளைக் காப்பாற்றச் சென்ற அவரின் தாயாரையும் நாய்கள் விட்டுவைக்கவில்லை.

தலையில் படுகாயமடைந்த அச்சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி, நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளர் புகழேந்திமீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

சிறுமியின் சிகிச்சை செலவைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் புகழேந்தி உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்குப் பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று (மே 6) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “ஏற்கெனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரின் மனைவி தனலட்சுமியும் மகன் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“சிறுமியைக் கடித்த நாயானது, மத்திய அரசு தடை செய்துள்ள நாய் வகையைச் சேர்ந்தது. மத்தியஅரசு 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. அதில், ராட்வீலர் எனப்படும் நாயும் உண்டு. ஆனால், தடையை மீறி அந்த நாய் வளர்க்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது,” என்று கூறினார்.

சிறுமியை நாய் கடித்த விவகாரம், நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

“சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் உரிமம் பெற வேண்டும். நாய்களுக்கு அனைத்துத் தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்,” என்று திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்