விதிமீறல், வாக்குவாதம்: கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்குப் பதிவு

விதிமீறல், வாக்குவாதம்: கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்குப் பதிவு

1 mins read
a7925426-0f3d-4cff-b810-2bf1a5b054ea
ஸ்ரீநிதியும் அவரது குழுவினரும் தேர்தல் பறக்கும் படையினரிடம் வாக்குவாதம் செய்தனர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சிவகங்கை: அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி பிரசாரம் செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) மானாமதுரை சென்ற அவர், காந்தி சிலை அருகேயுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் வார்டு வார்டாகச் சென்று வாக்குச் சேகரிக்கப் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாக்கு சேகரிக்க அனுமதி பெற்ற விவரத்தைக் கேட்டனர்.

வாக்கு சேகரிக்க அனுமதி தேவையில்லை என்று அதிகாரிகளிடம் ஸ்ரீநிதியும் கட்சியினரும் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஸ்ரீநிதி தனது காரில் ஏறி அமர்ந்தார்.

பின்னர் கட்சியினர் ஆட்டோவில் ஒலிபெருக்கி பிரசாரம் செய்வதற்கு பெற்ற அனுமதியை காட்டினர். ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அதிகளவில் கூட்டம் கூட்டி வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறினர்.

இருப்பினும், அதிகாரிகளின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பிரசாரம் செய்தனர்.

இதையடுத்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில், அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஸ்ரீநிதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி, மகளிர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீவித்யா, திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் 60 பேர் மீது மானாமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

குறிப்புச் சொற்கள்