பறக்கும் படையிடம் ரூ.305 கோடி சிக்கியது

பறக்கும் படையிடம் ரூ.305 கோடி சிக்கியது

2 mins read
ab316af4-d8ff-42f1-92fa-6b25c4a97752
வாகனச் சோதனையின்போது சிக்கிய ரூ.305 கோடியில் ரூ.74 கோடி வருமான வரி மீறல் தொடர்புடையது. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை விளக்க, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 70 விழுக்காடு வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.

“முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தமுறை நூறு விழுக்காடு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6,000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. விரைவில் அதுவும் வழங்கப்படும்.

தேர்தல் ஆணையப் புத்தகத்தில் உள்ள சின்னங்களின் வரைபடத்தின் அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மைக் சின்னம் மாறியதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்.

“தோ்தல் நடத்தை விதி அமலாக்கப்பட்டதில் இருந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 11) காலை 9 மணி வரை, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.144.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“ரூ.5.13 கோடி மதுபானங்களும் ரூ.94 லட்சம் போதைப்பொருள்களும் ரூ.121.76 கோடி மதிப்புடைய ஆபரணங்களும் ரூ.33.08 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் ஆகியுள்ளன.

“ரொக்கத் தொகையுடன் சோ்த்து அவற்றின் மொத்த மதிப்பு ரூ.305.36 கோடி. அதில் 74 கோடி ரூபாய் வருமானவரித்துறையிடம் சிக்கியது

“தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ரசீதுகள், ஆவணங்களுடன் மட்டுமே பணம், ஆபரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லை.

“தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்வது வாகன சோதனைகளின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்,” என்றார் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

குறிப்புச் சொற்கள்