100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு: தமிழகத்தில் இனி ரூ.319 ஆக கிடைக்கும்

2 mins read
fa63e6db-98d7-4014-8a62-3f0e6c67a5b4
படம்: - தமிழக ஊடகம்

புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 விழுக்காடு உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாள்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகின்றன. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.28 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட உயர்வு 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குவதால், தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அண்மையில் பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்