சிவகங்கை தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்

சிவகங்கை தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்

2 mins read
4510d260-39d4-4409-ba3a-51eb6acddb23
(இடமிருந்து) சேவியர் தாஸ், கார்த்தி சிதம்பரம், தேவநாதன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதனின் சொத்து மதிப்பு ரூ.305 கோடியாகும்.

அவரது பெயரில் ரூ.149 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.37.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், அவரது குடும்பத்தாரின் பேரில் ரூ.119 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பெயரில் சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான, அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவரது மனைவிக்கு உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.51 கோடி எனக் கூறப்படுகிறது.

சிவகங்கையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் ரூ.6.66 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

இதற்கிடையே, தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவரது குடும்பத்தார் பெயரில் ரூ.6.54 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமது மொத்த சொத்து மதிப்பு ரூ.21.54 கோடி என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தமது சொத்து மதிப்பு ரூ.45.33 கோடி என்று தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ.17 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தனக்கு ரூ.98.26 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்