போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

2 mins read
1fc50031-5f98-4c04-90f4-f870a2fe0a5c
சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், தற்போது அவரது வீட்டிற்கு சீல் வைத்தபோது வெளியிடப்பட்ட படம். - கோப்புப்படம்:
Google News Preferred Icon

சென்னை: ரூபாய் 2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சில வங்கிக் கணக்குகளை மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது.

இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தனிப்படை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதனால் பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி காவல்துறை டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணித் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் காவல்துறை பிப்ரவரி 23ஆம் தேதி சோதனை மேற்கொண்டது. அங்கு அவரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை. அந்த வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் இப்போது அவரது வங்கிக் கணக்குகள் சில முடக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து அந்த வீட்டுக் கதவில் பிப்ரவரி 26ஆம் தேதி டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையை ஒட்டிச் சென்றனர். மேலும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அழைப்பாணை ஒட்டப்பட்டு உள்ளது.

ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பித்து ஓடிவிடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்