ஸ்டாலின்: பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

ஸ்டாலின்: பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

2 mins read
68eca33e-1924-411d-af0d-e8b1aed29cf2
இண்டியா அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இண்டியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளை பாரதிய ஜனதா கட்சி தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய இண்டியா அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி மடல் எழுதியுள்ளார். அதில் அவர், “வரும் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றுப்போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அதனால்தான் இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறார். அந்தத் தோல்வி பயத்தால் ஏற்பட்ட கோபத்தை அவரது முகம் காட்டுகிறது. அதனால்தான் திமுகவைப் பற்றியும் திமுக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவரது திட்டங்களுக்கு திமுக தடைபோடுகிறது என்று கூறியுள்ளார். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

“ஏழைகளின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடமான நீட்டை எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் எழுப்பப்படும் தடைக்கல்லை எதிர்க்கிறோம். உழவர்களை நிலத்தில் இருந்து விரட்டும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம். சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரான குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிறோம். இவை அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுத்தான் எதிர்க்கிறோம்.

“ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் தமிழக மக்களை மீளாத் துயரில் தவிக்கவிட்ட இரக்கமற்ற ஓர் அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

“திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி. திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

“எனவே, பாஜக அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் ‘நாற்பதும் நமதே’ என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்,” என்று ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

“இப்போது மாபெரும் ஜனநாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும்.

“பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகப் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்,” என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்