தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை

1 mins read
80108eca-6b05-4783-a18c-70f3b13b4dc5
கடற்கரையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பஞ்சு மிட்டாய் மட்டும் அல்லாமல் நிறமூட்டப்பட்ட வேறு மிட்டாய் வகைகளையும் தமிழக அரசு அண்மையில் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அப்போது பஞ்சுமிட்டாயில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் பஞ்சுமிட்டாய் தரக்குறைவான, பாதுகாப்பற்ற உணவு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையடுத்து பாதுகாப்பற்ற உணவு விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் பஞ்சுமிட்டாய்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அதிகாரிகள் வேகப்படுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பஞ்சுமிட்டாய்கள் அதிகம் விற்கப்பட்டுவருவதால் அந்த இடங்களைக் குறிவைத்து நிறைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பஞ்சு மிட்டாய் வழங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி (வேதிப்பொருள்) சேர்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்