ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்: அழகிரி

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்: அழகிரி

1 mins read
a2135a90-ff3d-4360-88f4-2f8c068a5034
கே.எஸ்.அழகிரி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் காழ்ப்புணர்வோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை ஏற்க இயலாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 27ஆம் தேதி (நாளை) காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும் அவரது இந்திய தேசிய ராணுவமும் அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

“இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துக்களை பெற்றவர் சுபாஷ்சந்திர போஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையைக் கையாண்டவர் காந்தி. அதற்கு நேர்மாறாக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்தியவர் சுபாஷ் சந்திர போஸ்.

“இவர்களுடைய பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு பாராட்டி வருகின்றனர். இருவரிடையே பேதம் கற்பிக்கும் வகையில் தமிழக ஆளுநர் கூறியிருப்பது வரலாற்றைச் சரியாக அறிந்தும் அதை திரித்துப் பேசும் மலிவான அரசியல் ஆகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்,” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில், மாநிலம் முழுவதும் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவது போலாகும் எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்