ஸ்டாலின்: மத்திய அரசுக்குப் பணம் தரும் ‘ஏடிஎம்’ ஆக மாநிலங்களை மாற்றிவிட்டனர்

ஸ்டாலின்: மத்திய அரசுக்குப் பணம் தரும் ‘ஏடிஎம்’ ஆக மாநிலங்களை மாற்றிவிட்டனர்

2 mins read
3e6e3da8-9e9d-4fff-89fa-8a761fcf3772
முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சேலம்: தெற்கில் விடியல் பிறந்தது. அதுபோல இந்தியா முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலினிடம் திமுகவில் இளைஞர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

திமுகவின் இரண்டாவது மாநில இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. திமுக இளைஞரணியின், மாநில உரிமை மீட்பு மாநாட்டில் 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரை வெளியிட்டார்.

பேருரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநிலத்திற்கான நிதி அதிகாரத்தை பாஜக அரசு முற்றிலுமாக பறித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் அவர், மத்திய அரசுக்குப் பணம் தரும் ஏடிஎம்மாக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் என்று சாடினார்.

தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு காசு கூட வரவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அதிமுக பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக உடன் அனைத்தையும் செய்துவிட்டு தற்போது கூட்டணி முறிந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுவதாகவும் விமர்சித்தார்.

தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியாவிலும் விடியல் பிறக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முன்னதாக உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூசும் பாஜகவை அகற்றுவதே முதல் பணி என்று சூளுரைத்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரிடம் மேடையிலேயே கேட்டுக்கொண்டார்.

திமுக இளைஞரணி மாநாட்டில் உரையாற்றிய கனிமொழி, மத்திய அரசை கேள்வி கேட்டால் , சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நம்மை தேடிவரும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்