பாஜகவின் ஆன்மிக வலையில் மக்கள் சிக்க மாட்டார்கள்: தமிழக காங்கிரஸ்

2 mins read
d5ccb4cb-ae3c-4c66-9394-b00633a808ef
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடி மறைப்பதற்கு அயோத்தியில் ராமர் கோயில் தொடக்கவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட மோடி முனைப்புக் காட்டி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிந்திருக்கிறார். அதேநேரத்தில் திருவரங்கம், ராமேசுவரம் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயம் தேட பிரதமர் மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார் கே.எஸ்.அழகிரி.

தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வரும் பிரதமர் மோடியினுடைய ஆன்மிக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள் என்று திரு அழகிரி கூறியுள்ளார். தமிழகம் என்றைக்குமே பாஜக எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.

மேலும், அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது.

எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகின்றனர். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி என்று அந்த அறிக்கையில் அழகிரி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்