ஜெயலலிதாவுக்கு கோடநாடு தோட்டத்தில் மணிமண்டபம்

ஜெயலலிதாவுக்கு கோடநாடு தோட்டத்தில் மணிமண்டபம்

1 mins read
87fd01da-434a-4413-a77e-677abcb3847c
சசிகலா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நீலகிரி: கோடநாடு தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார்.

இந்தப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைச் சேர்ந்த அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா. அங்கு அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது மிக விரைவில் அதிமுக ஒன்றுசேரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைச் சந்திக்க வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இப்படிப்பட்ட சூழலில் தாம் அங்கு வர நேரிடும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்றார்.

“பிளவுபட்ட அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி பெறும் எனவும் நம்புகிறேன். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது,” என்றார் சசிகலா.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு காலஞ்சென்ற முதல்வர் ஜெ.ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனை வாங்கிக் கொடுப்பார் என்று தான் நம்புவதாகவும் சசிகலா மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்