ஜல்லிக்கட்டில் காளையை இறக்கும் இளம்பெண்

ஜல்லிக்கட்டில் காளையை இறக்கும் இளம்பெண்

2 mins read
a092f468-0cc1-4d7e-8b45-3c94c9282734
 ‘ராமு பையா’ வுடன் வவிஷ்ணா. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் ‘ராமு பையா’ என்ற தனது காளையைக் களமிறக்கத் தயாராகி வருகிறார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. ஜல்லிக்கட்டுப் போட்டியில் தற்போது பெண்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, பயிற்சி அளித்து வாடிவாசலில் களமிறக்குவதில் பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிடும்போது, அந்தக் காளை அதுவரை பிடிபடாத காளையாக இருந்தால் அதன் பெருமைகளைச் சொல்வதுடன், உரிமையாளரின் பெயரையும் வர்ணனையாளர்கள் அறிவிப்பார்கள்.

இந்தக் காளையை கடந்த 10 ஆண்டுகளாக வவிஷ்ணாவின் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இக்காளையை களமிறக்கி வருகின்றனர். இதுவரை எந்தவொரு போட்டியிலும் வீரர்களால் இந்தக் காளையை அடக்க முடியவில்லை.

2020ஆம் ஆண்டு தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் பிளஸ் 2-வுக்குப் பிறகு மேற்படிப்பைத் தொடர முடியாத வவிஷ்ணா தையல் தொழில் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.

“அப்பாவுக்கு ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். எனக்கு இணையாக இந்தக் காளையையும் பாசமாக வளர்த்தார். அவர் காலமானதையடுத்து அவர் வளர்த்த காளையை நான் பராமரித்து வருகிறேன். காளையை நான் வளர்த்து வந்தாலும் இதுவரை போட்டி நடைபெறும் இடங்களில் எனது சித்தப்பாதான் அதை அவிழ்த்து விட்டு வருகிறார்.

“காளைக்குத் தண்ணீர் வைப்பது, தீவனம் வைப்பது, மேயவிட்டு அழைத்து வருவது ஆகிய அனைத்துப் பணிகளையும் நான் செய்ததால் இக்காளை எனது சொல்படி கேட்கும். என்னையும், சித்தப்பாவையும் தவிர்த்து வேறு யாரையும் ‘ராமு பையா’ அருகில் நெருங்கவிடாது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இதுவரை யாரிடமும் பிடிபடாத எனது காளை வாஷிங் மெஷின், தங்கம், வெள்ளிக் காசுகள், பட்டுச் சேலைகள் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த முறை நானே நேரில் சென்று வாடிவாசலில், ‘ராமு பையா’-வை களமிறக்க உள்ளேன்,” என்று வவிஷ்ணா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டுகாளைஇளம்பெண்