எண்ணூர் வாயுக் கசிவு: போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்

எண்ணூர் வாயுக் கசிவு: போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்

2 mins read
29eeb369-b6a3-43cb-b32b-189df05cfb4f
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்ட குழாய்வழியை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு பகிர்ந்திருந்தார். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அந்த அறிக்கையில், “எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் செவ்வாய்க்கிழமை (டிச.26) மிதமான அளவு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் அதிகாலை 4.30 மணியளவில் சின்னகுப்பம், பெரியகுப்பம் கிராமங்களில் மக்கள் அமோனியா கசிவை உணர்ந்தனர்.

“இதனையடுத்து அந்த நிறுவனம் வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தையும், குழாய்வழியில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து அது ஒரே நாளில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆகையால் இந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமோனியா எடுத்துச் செல்லும் குழாயின் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட CIL (கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடட்) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமான நடைமுறையின்படி ஆலை இயங்கிக் கொண்டிருந்த டிச.26 இரவு 11.30 மணியளவில் கடற்கரையோரத்தில் உள்ள அமோனியா குழாய்வழியில் அசாதாரண நிகழ்வைக் கண்டோம். இதனையடுத்து எங்களது குழுவினர் அமோனியா குழாய்வழியைத் தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்தனர்.

இந்த நடவடிக்கையின்போது அருகில் வசித்த மக்கள் சிலர் அசௌகரியங்களை உணர்வதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட்டது. அனைவரும் பத்திரமாக உள்ளனர். இயல்புநிலை திரும்பியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் எப்போதுமே உயர்தர பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு இயங்குகிறது. அதேபோல் சிறப்பான அவசர கால செயல்பாட்டுக் குழுவையும் கொண்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? 

எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தத் தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தத் தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதையடுத்து தொழிற்சாலை மற்றும் காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை தகவல் அளித்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்