800 உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5,000 பரிசு

1 mins read
240ac5fe-7dbe-4904-990a-5cb4b69a7dd9
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அதிகனமழையிலும் தண்டவாளப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. - படங்கள்: இந்திய ஊடகம்

ஸ்ரீவைகுண்டம்: தமிழ்நாட்டின் தென்பகுதியில் அண்மையில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாகச் செயலிழந்தது.

ஆனால் அதிகனமழையிலும் இருப்புப் பாதையின் பராமரிப்பை தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் ஆய்வு செய்துவந்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மண் அரிப்பினால் ரயில் தண்டவாளம் சேதம் அடைந்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தண்டவாளப் பராமரிப்பாளர் உரிய நேரத்தில் தகவல் அளித்ததால் செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

அந்த ரயிலில் 800க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

விரைவாகச் செயல்பட்டு கடமையைச் சிறப்பாகச் செய்து 800 உயிர்களைக் காப்பாற்றிய பராமரிப்பாளர் செல்வகுமாரை ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது.

அத்துடன் அவருக்கு ரூ.5,000 கௌரவப் பரிசாகவும் ரயில்வே துறை அளித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பராமரிப்பாளர் செல்வகுமாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதே நேரத்தில், 800 உயிர்களைக் காப்பாற்றியவருக்கு வெறும் ரூ.5,000 என்பது ஓர் உயிரின் மதிப்பு ரூ.6.25 என்பதுபோல் இருக்கிறதே என்ற விமர்சனங்களும் பதிவாகியுள்ளன.

செல்வகுமார் ஆற்றிய நற்செயலுக்கு உரிய வெகுமதி வழங்க வேண்டியது ரயில்வே துறையின் கடமை என்றும் இணையவாசிகள் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்