புழல் ஏரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

1 mins read
84885766-514d-416e-8ff4-a47cbeac14f2
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,898 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதையடுத்து சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளது.

தற்போது நீர்வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய் செல்லும் பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,898 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. 21.2 அடி உயரம் கொண்டு ஏரி தற்போது 19.42 அடிக்கு நிரம்பியுள்ளது. நீர்வரத்து 570 கன அடி ஆகவும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டும் வருகிறது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்