தீபாவளிப் பரிசாக ஊழியர்களுக்கு வாகனம்

தீபாவளிப் பரிசாக ஊழியர்களுக்கு வாகனம்

2 mins read
56aee1d0-b482-4696-8f9f-d9fdceb60db2
படம்: - சமூக ஊடகம்
Google News Preferred Icon

கோத்தகிரி: பெரும்பாலான தமிழ்நாட்டு நிறுவனங்கள் தீபாவளிப் பண்டிகையின்போது அதன் ஊழியர்களுக்கு ‘போனஸ்’ வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.

சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளை வழங்கி அசத்தியுள்ளார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த தேயிலை உரிமையாளர் சிவக்குமார்.

சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார் சிவக்குமார்.

இவரது நிறுவனங்களில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தீபாவளி மற்றும் ஆயுத பூசை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசைக் கொடுத்து அசத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி தனது நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட், மோட்டார் சைக்கிள்களைத் தீபாவளிப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ஊழியர்களை திடீரென அழைத்த சிவக்குமார், “உங்களுக்கான தீபாவளிப் பரிசு” என சாவிகளை வழங்கியபோது, ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

உரிமையாளர் சிவக்குமார், தன் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்துகொண்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர்.

அவை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள நான்கு ராயல் என்பீல்டு கிளாஸிக், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்ஃபீல்டு ஹன்டர், ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.

பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, “நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளிப் பரிசு,” எனக் கூறி, ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார்.

இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களும் போனஸ் தொகையும் வழங்க உள்ளார் சிவக்குமார்.

“எனது நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வோர் ஊழியரின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.

“ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களைத் தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன், என்றார் சிவக்குமார்.

இந்த சம்பவம் குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்