பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கு முதலிடம்

1 mins read
91c5ef75-059c-4012-803a-dc3cdc9907d0
பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127வது இடத்தையும் பிடித்துள்ளது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம். - கோப்புப்படம்

சென்னை: இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை மாநகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் உலகின் முக்கிய நகரங்களின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.

இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகரப் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையர் சந்தீப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்