டெங்கி: இரு மாதங்களில் 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

டெங்கி: இரு மாதங்களில் 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

2 mins read
69948e6e-6d7b-43c9-a2aa-ebca2956ee2d
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: மிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த இரு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,500 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போது அரசு மருத்துவமனைகளில் 531 பேர் டெங்கிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை ஐந்து பேர் பலியாகிவிட்டனர் என்றும் அமைச்சர் கூறினார்.

“எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 1,000 முதல் 1,500 பேர் வரை டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

“தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தால், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாகக் குறைந்துள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

டெங்கி பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மாநிலம் முழுவதும் கொசு ஒழிக்கும் நடவடிக்கைகளான கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“டெங்கி பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பருவமழைக்கும் வீடுகளைச் சுற்றி உடைந்த பானைகள், வாழை மட்டைகள், உடைந்த ஓடுகள், டயர், டியூப் போன்ற பல்வேறு பயன்பெறாத பொருள்களில் தேங்கி நிற்கும் நீரில், ‘ஏடிஸ்’ கொசு உருவாகி அதன்மூலம் டெங்கி பரவுகிறது.

“இதை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பொதுமக்கள் கவனமாக இருந்தால் காய்ச்சல் பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும் என்றும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
டெங்கி