குலசேகரபட்டினத்தில் இருந்து சிறிய ராக்கெட்டுகளை ஏவலாம்: இஸ்ரோ தலைவர்

2 mins read
47d2a5ec-77ff-40d9-80a5-29a68d83e1e8
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்குச் சிறந்த இடம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், “தூத்துக்குடி அருகே குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அரசு 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. அங்கிருந்துதான் ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது.

“அதேபோல அங்கு திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருகிறது. அது பற்றி ஆலோசித்தேன்.

“மேலும், இஸ்ரோவில் நடந்துவரும் பணிகள் குறித்து முதல்வரிடம் கூறினேன். அவரும் அதுகுறித்து அறிந்துள்ளார்.

“இஸ்ரோவின் முன்னெடுப்புகளுக்கு உதவுவதாக அவரும் கூறினார். நாட்டின் விண்வெளி சார்ந்த பணிகளுக்கு தமிழகத்தின் பங்களிப்பு பெருமையளிக்கிறது.

“ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால் அங்கிருந்து ஏவப்படும் அனைத்தும் அந்தத் தீவைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

“அவ்வாறு சுற்றிச் செல்லும்போது, ராக்கெட்டின் பேலோட் திறன் குறைந்து விடுகிறது. இதனால், சிறிய வகை ராக்கெட்டுகளை அங்கிருந்து ஏவுவதற்கு சிரமமாக உள்ளது.

“அந்த சிரமத்தைக் குறைக்க குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென்பகுதிதான் சிறந்தது,” என்றார் சோம்நாத்.

குறிப்புச் சொற்கள்