சென்னை: குடிசைகளைக் கொண்ட வட்டாரங்கள் தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் அதிகரித்து உள்ளன.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் அடிப்படை வசதிகளற்ற குடிசைப்பகுதிகள் 91% அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று நகரங்களிலும் 378ஆக இருந்த குடிசைப் பகுதிகள் 616ஆக அதிரித்துள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவித்து உள்ளன.
அதிகரித்திருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கையும் 65.95% அதிகரித்துள்ளது. 77,671 என்றிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,28,893 குடும்பங்களாக அதிகரித்துள்ளது.
மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் குடிசைப்பகுதிகள் அதிகரித்துள்ளன. ஐந்தாண்டு காலத்தில் ஏறக்குறைய 92 விழுக்காடு இங்கு குடிசை நிறைந்த பகுதிகள் பெருகி உள்ளன.
பொதுவாக குடியிருக்கக் கூடிய குடிசைப்பகுதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கு ஏற்ற ஆட்சேபனையற்ற நிலங்களில் அமைந்திருக்கும்.
அதேநேரம், குடியிருக்கத் தகுதியில்லாத குடிசைப் பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டவை, ஆரோக்கியமற்ற சூழலில் அமைந்திருக்கும். மக்கள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் அங்கு இருக்காது.
2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 44 குடிசைப் பகுதிகளை அகற்றிய தமிழக அரசு, அப்பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாதவண்ணம் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், 2005ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வேளச்சேரியின் சதுப்பு நிலப்பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசைகளாகவும் குடியிருப்புகளாகவும் மாறின. கோவிலம்பாக்கம் ஏரிப் பகுதியிலும் 2002ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
2015ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய 85 ‘ஆட்சேபனைக்குரிய’ குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

