மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.
மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இந்த முறைகேடு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் குவாரி முறைகேடு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கை அளித்தார் சகாயம்.
முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்றளவும் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதியின் ஒலம்பஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவானது. அந்நிறுவனம் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் வகையில் அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பது குற்றச்சாட்டு.
அந்நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் ஐயாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார் துரை தயாநிதி.

