கணவரைக் கொன்று கழிப்பறைத் தொட்டியில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கணவரைக் கொன்று கழிப்பறைத் தொட்டியில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

2 mins read
3280e40b-3c36-4764-b87c-d3bb0c04d61b
பாண்டி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சிவகங்கை: கணவரை அடித்துக்கொன்று அவரது சடலத்தை கழிப்பறை தொட்டியில் போட்ட மனைவி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையிடம் சிக்கினார்.

இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கணவர் மது அருந்திவிட்டு தம்மிடம் தகராறு செய்ததாகவும் அவரது கொடுமையைத் தாங்க முடியாமல் அடித்துக்கொன்றதாகவும் மனைவி வாக்குமூலம் அளித்தார். கணவரது எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

அண்மையில் தேவகோட்டை கம்பன் தெருவில் வசிக்கும் சீராளன் என்பவரது வீட்டின் கழிப்பறைத் தொட்டியில் இருந்து மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த வீட்டில் பேருந்து ஓட்டுநரான பாண்டி என்பவர் குடியிருந்தது தெரியவந்தது.

சென்னையில் வேலை பார்த்துவந்துள்ளார் பாண்டி. விடுமுறையின்போது ஊருக்கு வந்து மனைவி சுகந்தி, மகன், மகளுடன் தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்த பாண்டி, மதுபோதைதயில் மனைவி சுகந்தியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிப்போன நிலையில், கணவர் பாண்டியின் தலையைப் பிடித்து சுவற்றில் மோதியுள்ளார் சுகந்தி. இதில் பாண்டி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகந்தி, என்ன செய்வது எனத் தெரியாமல் வீட்டின் கழிப்பறை தொட்டியில் பாண்டியின் உடலைப் போட்டுள்ளார். பிறகு அந்த வீட்டைக் காலி செய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, தனது மகனைக் காணவில்லை என பாண்டியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது, கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும் மாதந்தோறும் தனக்கு பணம் அனுப்புவதாகவும் சுகந்தி கூறியுள்ளார். இதை நம்பி பாண்டியின் தந்தை புகாரை திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது.

எனினும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த எலும்புக்கூடு சுகந்தியை சிக்க வைத்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கொலை