அன்பில் மகேஸ்: நீட் தேர்வு பயிற்சி விரைவில் தொடங்கும்

அன்பில் மகேஸ்: நீட் தேர்வு பயிற்சி விரைவில் தொடங்கும்

1 mins read
09bf4342-6450-4501-a420-ba88d448c4db
அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என்றார்.

“நீட் தேர்வு மட்டுமல்லாமல் வேறு சில போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள். அதைக் கவனத்தில் கொண்டு உயர் கல்வியில் சேருவதற்கான மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

செப்டம்பர் மாதம் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவது சரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயர் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மாணவர்களின் நலன் கருதி பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த உள்ளது. அதேசமயம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் நடவடிக்கை தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து தெலுங்கானா மாநில அதிகாரிகள் அண்மையில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, இந்தத் திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

குறிப்புச் சொற்கள்