திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் முதன்முதலாக தேனீ பூங்கா ஒன்றை அமைக்க பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கி இருக்கின்றன.
அந்தப் பூங்காவில் ஐரோப்பிய தேனீக்கள், இந்திய தேனீக்கள், டாமர் இன தேனீக்கள் என மூன்று வகையான தேனீக்கள் வளர்க்கப்படவிருக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை அழகு சூழ்ந்த ஜவ்வாது மலையில் அத்திப்பட்டு என்ற பழங்குடி மக்கள் கிராமத்தில் தேனீ பூங்கா அமைகிறது.
புதிய பூங்கா 14.8 ஹெக்டர் பரப்பளவில் அமையும். தேன் உற்பத்திக்கு உதவக்கூடிய வேம்பு, மகிழம், பூவரசம், புளி, சைனாபெர்ரி, வெள்ளைப்பட்டை அகாசியா, கரும் பலகை மரம், உள்ளிட்ட 32 வகை மரங்கள் ஆறு எக்டேர் பரப்பளவில் நடப்படுகிறது.
தேனீ பூங்காவில் வளர்க்கப்படும் மூன்று வகை தேனீக்களும் அதிக தேனை உற்பத்தி செய்யக்கூடியவை.
அவை மனிதர்களை கொட்டினாலும் அவ்வளவாக பாதிப்பு இராது.
அந்தப் பூங்கா அந்த வட்டார பழங்குடியின மக்களுக்குத் தேன் உற்பத்தி முறைகள் பற்றி பயிற்சி அளிக்கும். பூங்காவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த அன்னாசிப் பழங்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றைப் பயிரிட்டு பழங்குடியின விவசாயிகள் பலனடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


