திருவாரூர்: தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதின விழாவில் உரையாற்றியபோது, “வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த விரிவாக்கத் திட்டம் ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும்,” என்று கூறியிருந்தார்.
மேலும், “இந்தத் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற பள்ளியில் தொடங்கி வைக்கப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,” என்ற அறிவிப்பையும் அப்போது ஸ்டாலின் வெளியிட்டார்.
அந்த அறிவிப்புக்கு இணங்க, நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலை உணவு பரிமாறி, விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
அப்போது ஸ்டாலின் பேசுகையில், “வாழ்விலோர் பொன்னாள் என்று சொல்கின்ற வகையில் இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
“கலைஞர் படித்த தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். முதலமைச்சராகப் பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும் இந்த காலை உணவுத் திட்டம் எனக்கு ஒரு மனநிறைவைத் தருகிறது,” என்றார்.


