சென்னை: 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. அதேபோல முந்திய திமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
இந்த இருவர் மீதும் இவர்களின் மனைவியர் மீதும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விருதுநகரிலும் நடைபெற்றன.
விசாரணைக்குப் பின்னர் இருவரும் அவர்களின் மனைவியரும் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
இதையடுத்து, இந்த வழக்குகளை தானாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாக தூங்கவில்லை.
“மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொள்கிறோம். இரு வழக்குகளின் விசாரணையின்போதும் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை,” எனக் கூறி, இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார்.

