தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக: ராமதாஸ்

தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக: ராமதாஸ்

2 mins read
63fc71a3-41cb-49cc-836b-b550c72166da
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ். - படம்: ஐஏஎன்எஸ்
Google News Preferred Icon

சென்னை: உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நட வடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வாதிடுவதற்கு அனுமதிக்கலாம்; உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளே தொடர்ந்து கூறிவருவதுடன், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உதவியுடனேயே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் நாடு அரசு தொடங்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவதா அல்லது சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதன் பிறகு 17 ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட தமிழ் வழக்காடும் மொழியாக ஆக்கப்படவில்லை என்பதை மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

வெங்கடேசன் எம்பி எதிர்ப்பு

இதற்கிடையே, தமிழுக்குச் சுண்ணாம்பு, சமசுகிருதத்திற்கு வெண்ணெய் எனும் மனப்போக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது கடந்த 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஆனால், வேத சமசுகிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப் படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது,” என்று வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்

தொடர்புடைய செய்திகள்