சென்னை: ஆக்கிரமிப்பில் இருந்து 5,436 ஏக்கா் நிலங்கள் அறநிலையத்துறை சாா்பில் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்து உள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்தர சீராய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே. சேகா்பாபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பி.கே. சேகா்பாபு செய்தியாளா்களிடம் பேசினார்.
“அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் சுமாா் 100க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் அங்கு அா்ச்சகா்களை நியமனம் செய்வது குறித்தும் 13 திருக்கோயில்களில் ஓதுவாா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வின் அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
“புதிய அரசு பொறுப்பேற்றபின், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 8 திருக்கோயில்களிலும் ஒரு வேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.4,995 கோடி மதிப்பிலான 5,436 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் ரூ.5,000 கோடியை எட்டுவோம்,” என்றார் சேகர்பாபு.

