அலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகிவரும் மாடுபிடி அரங்கம்

அலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகிவரும் மாடுபிடி அரங்கம்

1 mins read
23e6d679-4f90-4b1e-b24a-cca9c33df38a
கட்டுமானப் பணிகளைப் பார்வையிடும் தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாடுபிடிக்காகத் தமிழக அரசு ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கத்தை அமைத்து வருகிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை எனும் சிற்றூரில் 66 ஏக்கர் பரப்பளவில் அவ்வரங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.44.6 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரங்கை மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, “இதுவரை 35 விழுக்காட்டுப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. இவ்வாண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவுறும்,” என்றார்.

அரங்க நுழைவாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, செயற்கைப் புல்தரை, மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ஓய்வறைகள், காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட வசதிகளை மாடுபிடி அரங்கம் கொண்டிருக்கும்.

அத்துடன், அலங்காநல்லூரிலிருந்து மாடுபிடி அரங்கிற்கு வருவதற்கான சாலை குறுகலாக உள்ளதால் விரைந்துவர ஏதுவாக புதிய சாலை அமைக்கப்படும் என்றும் அதற்காக 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திரு வேலு குறிப்பிட்டார்.

புதிய சாலைக்கான வரைவுத்திட்டம் தயார்செய்யப்பட்டு, விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாலையமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

பணிகள் முழுமையாக நிறைவுபெற்றபின் மாடுபிடி அரங்கைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பார் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்