கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்தாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.பூசாரிப்பட்டி கிராமத்தில் தானம்பட்டி செல்லும் சாலையில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு மது அருந்த வருபவர்களால் அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மது குடிக்க வருவோர் பெண்கள் மற்றும் மாணவிகளைக் கிண்டல் செய்வதால் அவர்கள் அச்சத்துடன் இப்பகுதியைக் கடக்கும் நிலையுள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

